அரியலூரை முதல் நிலை நகராட்சியாக மாற்ற முயற்சி மேற்கொள்வேன் ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பா உறுதி
ம.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, அரியலூர் நகரில் நேற்று ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கீழப்பழுவூர்,
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, அரியலூர் நகரில் நேற்று ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், பொதுமக்களிடைேய பேசுகையில், அரியலூர் நகராட்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரியலூரை முதல் நிலை நகராட்சியாக, 100 சதவீதம் சுகாதாரமான நகராட்சியாக மாற்ற முயற்சி மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையம் மேம்படுத்தப்பட்டு பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். சாலைகள் தரமானதாக அமைக்கப்படும். அரியலூரில் எந்த பகுதியிலும் கழிவுநீர் தேங்காத வகையில் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படும். அரியலூரில் சிமெண்டு தொழிற்பேட்டை, சுமை ஏற்றிச்செல்லும் லாரிகள் ஒழுங்குமுறை மையம் மற்றும் லாரிகள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும்.
அரியலூர் நகரில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அரை சுற்றுவட்ட பாதை முழு சுற்று வட்டப்பாதையாக விரிவுபடுத்தப்படும். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டு ஆலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, சாலைகள் அகலப்படுத்தப்படும், என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். பிரசாரத்தில் ஈடுபட்ட அவரை, மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தின்போது வழக்கறிஞர் கதிரவன், மனோகரன் உள்ளிட்ட தி.மு.க., ம.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.