மண்ணச்சநல்லூர் தொகுதியில் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் உறுதி

அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று மண்ணச்சநல்லூர் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-04-02 03:41 GMT
திருச்சி,

மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிரவன் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் அருண்நேரு ஆகியோரும் பிரசாரம் செய்தனர். பிரசாரம்  செய்த  இடங்களில் எல்லாம் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் அவருக்கு  உற்சாகமான வரவேற்பு அளித்தனர். நேற்று இனாம்சமயபுரம்  மற்றும் சுற்று  வட்டார பகுதிகளில் வேட்பாளர் கதிரவன்  தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  இலவச சிகிச்சை பிரசாரத்தின்போது வேட்பாளர் கதிரவன் பொதுமக்களிடையே பேசியதாவது:-

எங்களுக்கு சொந்தமாக பெரம்பலூர் மற்றும் சமயபுரத்தில் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பேன். இதற்காக தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையை கொண்டு எங்களது மருத்துவமனைகளில் இலவசமாக அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் பெறலாம்.

சாதாரண காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு தரமான சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படும். மேலும் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். அதே போல அரசு பள்ளிகளும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் முழுமையாக நிறைவேற்றும் திறன் கொண்டவர் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான். எனக்கு நீங்கள் வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்தால் நமது முதன்மை செயலாளர் உதவியுடன் உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று பேசினார்.

அப்போது ஒன்றிய செயலாளர் இளங்கோவன், சமயபுரம் நகர செயலாளர் துரை.ராஜசேகரன், தி.மு.க. பிரமுகர்கள் சார்லஸ், பிரவீன்குமார், தெய்வசிகாமணி, அப்துல்லா உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்