‘இந்தியை எதிர்ப்போம் என்று சொல்லி பீகார்காரரை அழைத்து வந்துள்ளார்’ மு.க.ஸ்டாலின் மீது டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாக்கு
இந்தியை எதிர்ப்போம் என்று கூறி விட்டு முதல்-அமைச்சர் ஆவதற்காக பீகாரில் இருந்து இந்தி காரரை மு.க.ஸ்டாலின் கூட்டி வந்திருப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சிவகுமாரை ஆதரித்து கூட்டேரிப்பட்டு பகுதியில் பேசியதாவது:-
இட ஒதுக்கீடு
இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல், இங்கு சிவகுமார் வெற்றி பெற்றால் ஒரு விவசாயி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அரசியல் என்பது ஒரு சேவை. நானும் டாக்டர் ராமதாசும் எல்லாம் செய்கிறது சேவை. மு.க. ஸ்டாலினுக்கும் விவசாயத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா மு.க.ஸ்டாலின் சேற்றில் கால் வைத்துள்ளாரா? நாற்று நட்டு உள்ளாரா?. இந்த கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் சேர்ந்ததற்கான காரணம் என்ன?. ஒண்ணு முதல்-அமைச்சர் விவசாயி, அடுத்து சமூக நீதி. வன்னியர்களுக்கு மட்டுமில்ல வன்னியர்களை போன்று பின்தங்கியுள்ள எத்தனையோ சமுதாயங்கள் அனைத்திற்கும் தனித்தனியாக இட ஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், என்னுடைய கொள்கை. எல்லா சமுதாயமும் முன்னுக்கு வரவேண்டும். அது நிச்சயமாக நடக்கும்.
கோபம் வரவில்லை
தி.மு.க.விற்கு பெண்களை மதிக்க தெரிகிறதா? தி.மு.க.வில் பெண்களுக்கு மரியாதை இருக்காது. பெண்களை அவமதிக்கும் கட்சி, பெண்களை கொச்சைப்படுத்தும் கட்சி, பெண்மையை கொச்சைபடுத்தும் கட்சி. தாய்மையை மதிக்கத் தெரியாது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.
முதல்-அமைச்சர் தாயை பற்றி அதாவது முதல்-அமைச்சர் தாயாக இருந்தாலும் சரி ஒரு விவசாயி தாயாக இருந்தாலும் சரி இன்னொருத்தர் அம்மாவை பற்றி யாராவது தவறாக பேசலாமா? அவ்வளவு கொச்சையாக பேசிய ஆ.ராசாவை இன்னைக்கு வரைக்கும் ஸ்டாலின் அவரை கண்டிக்கல.
இன்னொன்னு பாத்தீங்கன்னா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்பு அவங்க கட்சியில ராதாரவினு ஒரு நடிகர் அவர் நயன்தாராவைப் பற்றி தவறாக பேசினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் ராதாரவியை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டார். நயன்தாரா பற்றி பேசும் போது கோபம் வந்த ஸ்டாலின் அவர்களே ஒரு தாயைப் பற்றி பேசும்போது ஆ.ராசா மீது ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை. என்ன நியாயம் இது.
பெண்கள் முடிவு செய்து விட்டார்கள்
பெண்ணைப்பற்றி தாய்மையைப் பற்றி தவறாக பேசிய தி.மு.க.வை புறக்கணிக்க, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பெண்களும் தாய்மார்களும் முடிவு செய்துவிட்டார்கள்.
ஸ்டாலின் அவர்களே இந்தியை எதிர்ப்போம் என்கிறீர்கள், ஆனால் 700 கோடி கொடுத்து பீகாரிலிருந்து பிரசாந்த் கிஷோர் என்ற இந்திக்காரரை கூட்டிட்டு வந்து என்னை எப்படியாவது முதல்-அமைச்சராக ஆக்குங்கள் என்கிறீர்கள். எம்.பி தேர்தல்ல 39 இடங்களில் 38 இடங்கள் வெற்றி பெற்றீர்கள் இந்த இரண்டாண்டு காலத்துக்கு என்ன பண்ணீங்க.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்வோம் என கூறியுள்ளார். இது என்ன கோழைத்தனம் வட மாவட்டத்தில் ஒரு பிரசாரம் தென் மாவட்டத்தில் ஒரு பிரசாரமா?
இவ்வாறு அவர் பேசினார்.