கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே கார் மோதி பெண் பலியானார்.
கார் மோதியது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி ஜோதிமணி (வயது 59), விசைத்தறி தொழிலாளி. கணவன்-மனைவி இருவரும் தொழில் நிமித்தமாக வீட்டில் இருந்து புறப்பட்டு மொபட்டில் வெளியே சென்றனர்.
பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். 1008 சிவலிங்கம் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, அந்த வழியாக கோவையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக கார் ஒன்று வந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக மொபட் மீது கார் மோதியது. இதில் மொபட்டை ஓட்டிவந்த துரைசாமியும், ஜோதிமணியும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
சாவு
இதற்கிடையே ஜோதிமணியின் மீது கார் ஏறி விட்டு சென்றதால் ஜோதிமணி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ஜோதிமணியை அனுப்பி வைத்தனர். அங்கே ஜோதிமணி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.