தென்னிலை அருகே வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.37½ லட்சம் பறிமுதல்

தென்னிலை அருகே வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.37½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-04-01 19:17 GMT
க.பரமத்தி
வாகன சோதனை
தமிழகம் முழுவதும் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பது மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னிலை அருகே உள்ள வைரமடை சோதனை சாவடியில் அரவக்குறிச்சி தேர்தல் பறக்கும் படை அலுவலர் அசோகன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
37½ லட்சம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் 37½  லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்தவர்களிடம் இந்த பணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு வந்திருந்ததாக அவர்கள் கூறினர். 
இதுகுறித்து வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வருமான வரித்துறையினர் வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் ரூ.37½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்து, அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் அரவக்குறிச்சி சார்நிலை கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்