காவலாளி கொலை வழக்கில் அண்ணன் தம்பி கைது

கிணத்துக்கடவு அருகே நடந்த காவலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர். திருட சென்றதை தடுத்ததால் கொன்றதாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

Update: 2021-04-01 19:01 GMT
கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே நடந்த காவலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர். 

திருட சென்றதை தடுத்ததால் கொன்றதாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.  

காவலாளி கொலை 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோடங்கி பாளையத்தில் சர்வோதயா சங்கத்துக்கு சொந்தமான காந்தி பண்ணை உள்ளது. இங்கு செல்வராஜ் (வயது 55) என்பவர் தனது மனைவி சித்ராவுடன் தங்கி இருந்து காவலாளியாக வேலை செய்து வந்தார். 

இவர் கடந்த மாதம் 25-ந் தேதி இரவில் பண்ணையின் மெயின் கேட்டை பூட்ட சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் செல்வராஜை திடீரென்று கல்லால் தாக்கி கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை கொள்ளையடித்தனர்.
 
போலீசார் விசாரணை 

பின்னர் அவருடைய வீட்டிற்கு சென்று சித்ராவை மிரட்டி அவரிடம் இருந்து அரை பவுன் நகை மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். 

இது குறித்த புகாரின்பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

இந்த நிலையில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த செல்வராஜின் செல்போன் செயல்பட தொடங்கியது. 

உடனே போலீசார் அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது கோவை அருகே குட்டிகவுண்டன்பதியை சேர்ந்த தேவியிடம் இருப்பது தெரியவந்தது.

அண்ணன்-தம்பி கைது 

இதையடுத்து போலீசாா தேவியிடம் விசாரணை செய்ததில், தனது உறவினர்கள் 2 பேர் கொடுத்தாக தெரிவித்தார். உடனே போலீசார் அவர் மூலம், அந்த 2 பேரை அங்கு வரவழைத்து பிடித்தனர். 

பின்னர் 2 பேரிடமும் விசாரணை செய்ததில் அவர்கள், கோவையை அடுத்த இருகூரை சேர்ந்த கருப்பசாமி (23), அவருடைய தம்பியான 16 வயதை சேர்ந்தவர் என்பதும், செல்வராஜை கல்லால் தாக்கி கொன்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். 

தடுத்ததால் கொன்றனர் 

2 பேரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கருப்பசாமியும், அவருடைய தம்பியும் கோடங்கிபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மது அருந்திவிட்டு சர்வோதயா சங்க பண்ணை அருகே நடந்து சென்றனர்.

அப்போது பண்ணைக்குள் இருந்த வீ்ட்டில் விளக்கு எரிந்தது. எனவே அங்கு சென்று திருட நினைத்து பண்ணைக்குள் சென்றபோது காவலாளி செல்வராஜ் தடுத்து உள்ளார். 

எனவே அவரை கொன்றுவிட்டு அவருடைய வீட்டிற்குள் சென்று நகை, செல்போனை திருடியதாக வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்