வாக்களிக்க பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் எவை? தூத்துக்குடி தேர்தல் அலுவலர் விளக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்களிக்க எந்தெந்த ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்களிக்க எந்தெந்த ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாக்காளர் தகவல் சீட்டில், வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது. இதில் வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயர், தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் வைத்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது.
வாக்காளர்கள் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம்.
அதன்படி ஆதார் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப்புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண், தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.