தூத்துக்குடி சின்னக்கோவிலில் புனித வியாழன் நிகழ்ச்சி
தூத்துக்குடி சின்னக்கோவிலில் புனித வியாழன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி:
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டிற்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் தினத்துடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் முழுவதையும் கிறிஸ்தவர்கள் புனித வாரமாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று புனித வியாழன் தினமாக கடைபிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து யூதர்களிடம் பிடிபடுவதற்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுடன் கடைசி இரவு விருந்தில் பங்கேற்றார். அப்போது தனது சாவை முன்னறிவித்த இயேசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவர்களுக்கு ரொட்டித்துண்டுகளை வழங்கியதாக பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சின்னக்கோவில் என்றழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது முதியவர்களுக்கு ரொட்டி உள்ளிட்டவைகளை பிஷப் வழங்கினார். திரளான மக்கள் கலந்து கொண்டனர். தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான ஏசு உயிர் துறந்த தினமான புனித வெள்ளி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன.