சின்னசேலம் அருகே பரபரப்பு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆயுதப்படை போலீஸ்காரரை கடத்தி சென்று தாக்குதல் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது
சின்னசேலம் அருகே பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆயுதப்படை போலீஸ்காரரை காரில் கடத்தி சென்று தாக்கிய ஆட்டோடிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம்
ஆட்டோடிரைவர்
சின்னசேலம் அருகே இந்திலி கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரவிக்குமார்(வயது 33) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா(26). இவருக்கும் அதே கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன்(27) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அனிதா திடீரென மாயமானார். அவரை மணிகண்டன் கடத்தி சென்றுவிட்டதாக ரவிக்குமார் சின்னசேலம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மாயமான அனிதாவை மீட்டு அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
பஸ்சில் வந்தனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரவிக்குமார் அவரது தாய் சந்திராவுடன் இந்திலி முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சில் இருந்து மணிகண்டனும் அனிதாவும் ஒன்றாக இறங்கி சென்றனர்.
இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் மணிகண்டனிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் ரவிக்குமாரை திட்டி தாக்கியதோடு தடுக்க வந்த அவரது தாய் சந்திராவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
சரமாரி தாக்குதல்
இதன் முன்விரோதம் காரணமாக ரவிக்குமார் அன்று இரவு காரில் 10 பேர் கும்பலுடன் இந்திலி முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த மணிகண்டனை கடத்தி கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் ஏரிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் வலி தாங்க முடியாமல் மணிகண்டன் கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தனர். இதைப்பார்த்து ரவிக்குமாரும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்றனர்.
4 பேர் கைது
பின்னர் இதுகுறித்து மணிகண்டன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ரவிக்குமார், கொளஞ்சி மகன் அருண்குமார்(25), ராஜேந்திரன் மகன் பாலமுருகன்(28), உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் குமார்(32, இந்திலி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், சிலம்பரசன், ராஜா, ஆனந்தகுமார், சத்யராஜ், அருள் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரவிக்குமார், அருண்குமார், பாலமுருகன், குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அருகே பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆயுதப்படை போலீஸ்காரரை காரில் கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.