மத்திய-மாநில அரசு இணக்கமாக இருந்தால் நலத்திட்டங்கள் அதிக அளவில் கிடைக்கும்- நடிகை கவுதமி
மத்திய-மாநில அரசு இணக்கமாக இருந்தால் நலத்திட்டங்கள் அதிக அளவில் கிடைக்கும் என நடிகை கவுதமி கூறினார்
பனைக்குளம்
மத்திய-மாநில அரசு இணக்கமாக இருந்தால் நலத்திட்டங்கள் அதிக அளவில் கிடைக்கும் என நடிகை கவுதமி கூறினார்.
கவுதமி பிரசாரம்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் குப்புராமுவை ஆதரித்து மண்டபம் யூனியன் பகுதிகளில் நடிகை கவுதமி தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். வாலாந்தரவை அம்மன் கோவில் அருகாமையில் நடிகை கவுதமி பொதுமக்களைச் சந்தித்துப் பேசும்போது, மத்திய அரசு பெண்களுக்கான அதிகமான திட்டத்தை அறிவித்து உள்ளதால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மறைந்த ஜெயலலிதா அமைத்த அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும். அதிகமான நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மத்திய-மாநில அரசுகள் நட்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதன் மூலம் மக்களுக்கு நலத்திட்டங்கள் அதிக அளவில் கிடைக்கும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது தமிழகத்தில் வெற்றி கூட்டணியாக உள்ளது. எனவே ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாக்கு சேகரிப்பு
இதைதொடர்ந்து வேட்பாளரின் சொந்த ஊரான சாத்தான்குளம் கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் குயவன்குடி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்குகள் சேகரித்தார்.