சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநயாக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என்று திருக்கோவிலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

Update: 2021-04-01 16:43 GMT
திருக்கோவிலூர்

பொதுக்கூட்டம்

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வி.ஏ.டி. கலிவரதனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். தமிழக சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரு மான சி.வி.சண்முகம் பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க. தான் எதிரி

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். அதேசமயம் இந்த தேர்தலோடு தி.மு.க. என்ற தீய சக்தி அழிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் தி.மு.க. வெற்றி பெறக்கூடாது. 

 இந்த தேர்தல் விவசாயிக்கும், கோடீஸ்வரனுக்கும் இடையே நடக்கும் தேர்தல் ஆகும். விவசாயி எடப்பாடி பழனிசாமி தான் வெற்றி பெற வேண்டும். நமது கூட்டணி கட்சிகளுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை மறந்து நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். பொது எதிரி தி.மு.க. தான் என்பதை மனதில் கொண்டு தேர்தல் பணியாற்றினாலே நமது வெற்றி மிகவும் எளிதாகும்.

யோசித்து முடிவெடுங்கள்

இந்த தேர்தலில் தமிழக மக்கள் ஒன்றை தெளிவாக சிந்திக்க வேண்டும். மக்கள் நலனுக்காக பாடுபடும் எடப்பாடி பழனிசாமி வேண்டுமா? அல்லது குடும்ப நலனுக்காக பாடுபடும் கருணாநிதியின் குடும்பம் வெற்றி பெற வேண்டுமா? என்பதை யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இங்கே மேடையில் இருக்கும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் வி.ஏ.டி.கலிவரதன், ரிஷிவந்தியம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே.டி.சி.ஏ.சந்தோஷ், சங்கராபுரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் ராஜா ஆகியோரை நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்