மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் ராஜேஷ்குமார் பிரசாரம்
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார்.;
கருங்கல்,
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நேற்று நீரோடி பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிள்ளியூர் தொகுதியில் எனது முயற்சியால் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வீசிய ஒகி புயலில் நீரோடித்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை போன்ற மீனவ கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. அந்த கிராமங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் கேரிக்கை வைத்தேன். அதன்படி ரூ.116 கோடி நிதி பெற்று தற்போது இந்த கிராமங்களில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் மீனவர்களுக்கு பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்க முயற்சி எடுக்கப்படும். கடலரிப்பினால் கடலில் அடித்து செல்லப்பட்ட அரையந்தோப்பு- முள்ளூர்துறை சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
கல்லடி - சிமித்தேரி பாலத்தில் பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக இணைப்பு சாலை அமைக்க எனது தீவிர முயற்சியால் தற்போது ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் தேர்தல் முடிந்த உடன் தொடங்கப்படும். கடலரிப்பினால் அடித்து செல்லப்பட்ட வள்ளவிளை சாலையை சீரமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியதின் காரணமாக ரூ. 1 கோடி 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணியும் உடனடியாக தொடங்கப்படும். அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தவும், வேலைவாய்ப்புகள் பெருகவும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் எனக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் விஜய் வசந்துக்கும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, ததேயுபுரம், இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரையுமன்துறை, முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை, இனயம், சின்னத்துறை, ஹெலன்நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.