மோட்டார்சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி ஊராட்சி செயலாளர் பலி
மோட்டார்சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி ஊராட்சி செயலாளர் பலியானார்.
தேவாரம்:
உத்தமபாளையம் ஒன்றியம் பல்லவராயன்பட்டி ஊராட்சியில், மேல சிந்தலைச்சேரியை சேர்ந்த பார்த்திபன் (வயது 31) என்பவர் ஊராட்சி செயலாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் பல்லவராயன்பட்டி ஊராட்சியில், அலுவலக பணிகளை முடித்துவிட்டு, மாலையில் ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். வழியில் பல்லவராயன்பட்டி காலனி அருகே வரும்போது மோட்டார்சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.