சதீசன் உள்பட 7 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

கோடநாடு வழக்கில் சதீசன் உள்பட 7 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர்.

Update: 2021-04-01 14:46 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.

 இதுதொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. 

ஊட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட சயான், மனோஜை போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தவில்லை. ஜாமீனில் உள்ள சதீசன், திபு, சந்தோஷ் சாமி, ஜித்தின்ராய் உள்பட 7 பேர் ஆஜராகினர். மனோஜ்சாமி ஆஜராகவில்லை.

வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்தது. எதிர்தரப்பு வக்கீல்கள் சயான், மனோஜை ஆஜர்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினர். 

இதற்கு அரசு தரப்பில், போலீசார் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் ஆஜர்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 9-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்