கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மணப்பாறை தொகுதியில் ஒரு அரசு கல்லூரியாவது அமைக்கப்பட்டுள்ளதா? மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது கேள்வி
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மணப்பாறை தொகுதியில் ஒரு அரசு கல்லூரியாவது அமைக்கப்பட்டுள்ளதா? என மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது கேள்வி எழுப்பினார்.
மணப்பாறை,
மணப்பாறை சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியின் சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று மணப்பாறை நகரப்பகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி அனைத்து வார்டுகளுக்கும் சென்றார்.
அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகாலம் ஏதாவது சொல்லும்படியான வளர்ச்சித்திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதா? கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று 2 முறை வெற்றி பெறுவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக அளித்து விட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணப்பாறை பகுதிக்கு இதுவரை அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்தாரா?, காய்கனி மற்றும் பூக்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதா?, புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு விட்டதா?, பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு விட்டதா? இதுபோன்ற எந்த திட்டங்களும் மணப்பாறை தொகுதியில் செய்யப்படவில்லை. மணப்பாறை தொகுதி மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். தமிழகமும் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டது. ஆகவே மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை மணப்பாறை பகுதி வாக்காளர்கள் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.