ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்குசேகரிப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.;

Update: 2021-04-01 10:25 GMT
கோவை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

உற்சாக வரவேற்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையத்தில் பிரசாரம் செய்கிறார். 

இதற்காக அவர் பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு நேற்று இரவு காரில் வந்தார். கோவை வந்த அவரை தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 பின்னர் ஆர்.எஸ்.புரத்திற்கு அவர் தனது பிரசார வாகனத்தில் வந்தார்.
அப்போது அவர் திடீரென்று தனது வாகனத்தை விட்டு இறங்கி டி.பி. ரோட்டில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டதும் ஆச்சரியம் அடைந்த பொதுமக்கள் ஓடிவந்து அவர் அருகே நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

அவர்களுடன் மு.க.ஸ்டாலின் பேசியபடியே நடந்து சென்றார். அப்போது அவர்களிடம் வருகிற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

மு.க.ஸ்டாலின் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் நடந்து வந்தனர். 

மு.க.ஸ்டாலினை கண்டதும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் சென்றவர்கள் தங்களது வாகனத்தை விட்டு இறங்கி வந்து அவரிடம் பேசினர். மேலும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.குறிப்பாக இளம்பெண்கள், இளைஞர்கள் பலர் அந்த இரவு நேரத்திலும் மு.க.ஸ்டலினுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர்.

இதன்பின்னர் அவர் காரில் ஏறி தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார். இந்த நிகழ்வின்போது நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

மேலும் செய்திகள்