கோவையில் கடை மீது கல்வீச்சு: வியாபாரிகளுக்கு கமல்ஹாசன் ஆறுதல்
கோவையில் கடை மீது கல்வீச்சு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
கோவை,
கோவை பெரியகடைவீதியில் நேற்று இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கல்வீச்சு மற்றும் கடையடைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் பாதிக்கப்பட்ட கடைக்கு சென்ற அவர், கடை உரிமையாளரிடம் பேசினார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் கமல்ஹாசன், இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று கூறினார். பின்னர் அந்த கடையில் தனக்கு பிடித்த காலணிகளை கமல்ஹாசன் விலைக்கு வாங்கி சென்றார்.