இருண்ட தமிழகத்தை மீட்க உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் தி.மு.க. வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரசாரம்
கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
போத்தனூர்,
முதல் கட்டமாக காலையில் ஈச்சனாரி கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம் அலை என திரள்கிறது. ஒட்டுமொத்த தமிழகமும் உதயசூரியனுக்கு வாக்களிக்க துணிந்து விட்டனர். இருண்ட தமிழகத்தை மீட்க உதயசூரியனுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். கிணத்துக்கடவு தொகுதியில் உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்களில் ஒருவன் ஆகிய எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
நான் நகராட்சித் தலைவராக இருக்கும்போது, வடிகால் வசதி, சாலை வசதி, கான்கிரீட் சாலை வசதி, மின்கம்பம் வசதி, உயர் கோபுர மின் விளக்கு வசதி ஆகிய அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆட்சியை காப்பாற்ற மட்டுமே அவர்கள் கவனமாக இருந்தனர். மக்களைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை. இப்படி ஒரு அவலமான ஆட்சி நமக்கு தேவையா? இந்த ஆட்சியை தூக்கி எறிந்து ஸ்டாலினை அரியணையில் அமர வைப்போம்.
விவசாயிகளின் கவலை தீரவும், வியாபாரிகள் செழிக்கவும் தளபதியின் ஆட்சி மலர்ந்தால் மட்டுமே சாத்தியப்படும். தளபதி ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் மக்கள் குறைகள் தீர்க்கப்படும். தேர்தலில் கொடுத்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நமது தொகுதி மக்களுக்கு இவை அனைத்தையும் கிடைப்பதற்கு நான் பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க. கிழக்கு மாவட்டபொறுப்பாளர் சேனாதிபதி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முருகன்பதி கிருஸ்னம்பதி ஆகிய மலை கிராமங்களில் மலை வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தொட்டி மற்றும் மினிபஸ் போக்குவரத்து ஆகியவை தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தரப்படும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் குடிசை வீடகளை தார்சு வீடுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.