தொடரும் விலை சரிவால் தவிக்கும் தக்காளி விவசாயிகள்

உடுமலை பகுதியில் தக்காளி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் சூழலில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்று விவசாயிகள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-03-31 23:30 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் தக்காளி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் சூழலில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்று விவசாயிகள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
வரத்து அதிகரிப்பு
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளைப்போல இல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி நடைபெறுவதால் வெளியூர்களைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் இங்கு வந்து தக்காளி வாங்கிச் செல்வர். இதுதவிர கேரள மாநில வியாபாரிகளும் உடுமலை சந்தைக்கு வந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது  14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 20 முதல் ரூ.40 வரையே விற்பனையாவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
உடுமலை பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் மொத்த வியாபார சந்தைக்கு தக்காளி வரத்து அதிக அளவில் உள்ளது. ஆனால் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தற்போது போதுமான அளவில் தக்காளி விளைச்சல் உள்ளது. இதனால் வெளியூர் வியாபாரிகளின் வருகை குறைவாகவே உள்ளது. இதன்காரணமாக  14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி நன்கு பழுத்ததாக இருந்தால் ரூ.20-க்கும், காய்வெட்டாக இருந்தால் ரூ.40 வரையும் விற்பனையாகிறது.
மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள்
விளைநிலத்தில் விளையும் தக்காளியை வாகனங்களில் ஏற்றி சந்தைக்குக் கொண்டு வருவதற்கு தூரத்தைப் பொறுத்து ஒரு பெட்டிக்கு ரூ.15 முதல் ரூ.30 வரை வாடகை கொடுக்க வேண்டியதுள்ளது. இதுதவிர ஒரு பெட்டிக்கு இறக்கு கூலியாக ரூ.1.50 மற்றும் கமிஷன் தொகையாக 10 சதவீதம் கொடுக்க வேண்டியதுள்ளது. இதுதவிர பறிப்பதற்கு ஆள் கூலியாக ஒரு நபருக்கு ரூ.400 கூலியாக கொடுக்கிறோம். அந்தவகையில் சாகுபடிச் செலவு மற்றும் விவசாயியின் உழைப்பைக் கணக்கிடாமல் அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் வரையில் ஒரு பெட்டிக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை செலவாகிறது.
இதனால் 50 பெட்டி தக்காளியை விற்பனைக்குக்கொண்டு வந்தால் கையிலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வீடு செல்ல வேண்டிய வேதனையான நிலை உள்ளது. இதனால் சில விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். செடி வீணாகி விடும் என்று எண்ணும் விவசாயிகள் கூலி கொடுத்து தக்காளிப் பழங்களைப் பறித்து சாலையோரம் வீசிச் செல்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் உழவு ஒட்டி தக்காளித் தோட்டங்களை அழிக்கவும் தயாராகி விட்டார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் வரத்து அதிகரிக்கும்போது விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை தொடர்கிறது.
மதிப்புக்கூட்டு பொருள்
எனவே தக்காளியிலிருந்து ஜாம், சாஸ், ஊறுகாய் போன்ற மதிப்புக் கூட்டும் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உடுமலையில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. தற்போது தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டம் வகுக்கும் வேட்பாளருக்கு விவசாயிகளின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் திட்டத்தோடு நின்று விடாமல் அதனை நடைமுறைப் படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு  விவசாயிகள் கூறினர். 

மேலும் செய்திகள்