சேலம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: பயிற்சி பெண் டாக்டர் பலி 3 பேர் படுகாயம்

பயிற்சி பெண் டாக்டர் பலி

Update: 2021-03-31 23:25 GMT
சேலம்:
சேலம் அருகே மோட்டார் சைக்கிள், மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் பயிற்சி பெண் டாக்டர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விஷம் குடித்த பெண்
சேலம் அருகே உள்ள குப்பனூர் ஏ.டி.காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சூர்யா (25). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டுக்கு சரவணன் மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சூர்யா வீட்டில் அரளி விதையை அரைத்து (விஷம்) குடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து அவர் கணவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சரவணன், பக்கத்து வீட்டை சேர்ந்த கஸ்தூரி (29) என்பவர் உதவியுடன் தனது மனைவி சூர்யாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சிகிச்சைக்காக ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புறப்பட்டார்.
பயிற்சி பெண் டாக்டர் பலி
அப்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டராக பணிபுரிந்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஆனந்தி (23) என்பவர் மொபட்டில் சேலத்துக்கு வந்து கொண்டிருந்தார். ஆச்சாங்குட்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது சரவணனுடைய மோட்டார் சைக்கிளும், ஆனந்தியின் மொபட்டும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயிற்சி பெண் டாக்டர் ஆனந்தி உள்பட 4 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்