பெண்ணை திட்டிய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
சேலம்:
சேலம் வீரபாண்டியை அடுத்த பைரோஜி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பேபி (வயது 42). செல்வராஜ் மீது ஒரு வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக பேபி சாட்சி சொல்லி உள்ளார். இதில் ஆத்திரத்தில் இருந்த அவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி இரவு குடிபோதையில் பேபியின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளை சொல்லி அவரை திட்டி உள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்கு செல்வராஜ் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய செல்வராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பு அளித்தார்.