வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: வனவர் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை
வனவர் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை
சேலம்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வனவர் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வனவர்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வனவராக பணியாற்றியவர் ராஜாமணி (வயது 68). இவர் பணியில் இருக்கும் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு புகார்கள் வந்தன.
இது குறித்த தகவலின் பேரில் கடந்த 2001-ம் ஆண்டு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரிய வந்தது. மேலும் ராஜாமணியின் மனைவி தேன்மொழிக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வனவர் ராஜாமணி, அவரது மனைவி தேன்மொழி ஆகிய 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
4 ஆண்டு சிறை
அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வனவர் ராஜாமணி, அவரது மனைவி தேன்மொழி ஆகிய 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.