சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி தம்பதி பலி

பொங்கலூர் அருகே சாலையின் மையத்தடுப்பில் கார் மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்று வந்த கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களது மகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Update: 2021-03-31 23:23 GMT
பொங்கலூர்
பொங்கலூர் அருகே சாலையின் மையத்தடுப்பில் கார் மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்று வந்த கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களது மகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
திருமணம் தாமதம்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் வயது 61. விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி 51. இவர்களது மகன் லோகநாதன் 27. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதற்காக பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம்  காலதாமதம் ஆனது. 
இதனால் அந்த குடும்பத்தினர் கும்பகோணம் அருகே உள்ள திருமணஞ்சேரி சென்று லோகநாதனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக அங்குள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் காலை காரில் கும்பகோணம் திருமணஞ்சேரிக்கு புறப்பட்டு சென்றனர். 
கார்மோதி விபத்து
அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் 3 பேரும் மதியம் புறப்பட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை லோகநாதன் ஓட்டி வந்தார். காரின் முன் பகுதியில் லோகநாதனின் தாயார் சரஸ்வதி அமர்ந்து வந்தார். பின் இருக்கையில்  பாலசுப்பிரமணியம் படுத்துக்கொண்டு வந்தார். 
இந்த நிலையில் இவர்களது கார் பொங்கலூரை அடுத்த சோதனைச்சாவடி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கட்டு்ப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் அங்கு இருந்த சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 
தம்பதி பலி
இந்த விபத்தில் லோகநாதனின் தந்தை பாலசுப்பிரமணியம் மற்றும் சரஸ்வதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் லோகநாதனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் அவினாசிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். 
பின்னர் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்  பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சரஸ்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பாலசுப்பிரமணியத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். லோகநாதன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 இந்த விபத்து குறித்து அவினாசிபாளையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  சாலை விபத்தில் தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்