தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளிக்க மறுப்பது ஏன் கடலூர் பிரசாரத்தில் விஜயபிரபாகரன் கேள்வி
தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளிக்க மறுப்பது ஏன்? என கடலூரில் நடந்த பிரசாரத்தில் பொதுமக்களிடம், விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பினார்.
கடலூர்,
தேர்தல் பிரசாரம்
கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் ஞானபண்டிதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மாலை கடலூர் மஞ்சக்குப்பத்தில் விஜயபிரபாகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த, தே.மு.தி.க.வில் வேட்பாளர்கள் உள்ளார்களா என பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது நிற்கிற 60 தொகுதிகளிலும், வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி தே.மு.தி.க. தான்.
மாற்றத்தை கொண்டு வர கூட்டணி
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் அவர்கள் செய்த ஊழல்களை பற்றி தான் மாறி மாறி பேசி பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன. தற்போது தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் கொரோனா காலத்தில் இந்த அரசு என்ன செய்து கொண்டிருந்தது. எந்த இலவசங்களையும் மக்களுக்கு அளிக்கவில்லை. கபசுர குடிநீர் மட்டும் தான் இலவசமாக கொடுத்துள்ளது. 1000 ரூபாய் மற்றும் 1,500 ரூபாய்க்காக தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர தான் நாங்கள் அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். எந்த கூட்டணியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது பற்றி கூறவில்லை. எங்கள் கூட்டணி மட்டுமே அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
வாய்ப்பு கொடுங்கள்
வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற திட்டத்தை, தற்போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக அளித்து வருகின்றன. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த், அந்த திட்டம் பற்றி மக்களிடம் தெரிவித்தார். ஆனால் அப்போது மக்கள் அவரை ஆதரிக்கவில்லை. அதனால் மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வதற்காக தே.மு.தி.க.வுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தே.மு.தி.க. என்ன தவறு செய்தது. தே.மு.தி.க.வுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்கள். மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே கடந்த காலத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். எந்த ஒரு சுயலாபத்திற்காகவும் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. தொண்டர்களுக்கு சுய மரியாதை கொடுக்காததால் தான் கூட்டணியில் இருந்து வெளியில் வந்தோம்.
காப்பாற்ற முடியாது
தற்போது நூறுக்கும், பீருக்கும் மக்கள் விலை போனால் கடவுளால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. அதனால் மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்.
கடலூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் மீனவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்படும். அதனால் முரசு சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் ஞானபண்டிதனை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.