கடலூர் மாவட்டத்தில் 183 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தகவல்

கடலூர் மாவட்டத்தில் 183 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கூறினார்.

Update: 2021-03-31 20:46 GMT
கடலூர், 

ஆய்வு

கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் அரசு பெரியார் கல்லூரி யில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தபால் வாக்குகள்

மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,522 போலீசார் தபால் வாக்களிக்க உள்ளனர். இதற்காக அவர்களுக்கு படிவம் 12 வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஒரே இடத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யவில்லை. தனித்தனியாக தான் வாக்களிக்க வேண்டும். இதற்காக 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தபால் வாக்குகளை போடுவதற்காக பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெட்டியிலும் போடலாம்.
மே 1-ந்தேதி வரை தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்போது 15 கம்பெனிகளை சேர்ந்த 1300 துணை ராணுவத்தினர் வருகை வந்துள்ளனர். இவர்கள் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இது தவிர போலீசாருடன் இணைந்து ரோந்துப்பணியிலும் ஈடுபடுவார்கள்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
மாவட்டத்தில் 28 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 183 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். குறிப்பாக இங்கு துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கூறினார்.

மேலும் செய்திகள்