நாங்குநேரியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து சாலையில் பெயிண்டு கொட்டியது
நாங்குநேரியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து சாலையில் பெயிண்டு கொட்டியது.
நாங்குநேரி:
நெல்லையில் இருந்து வள்ளியூருக்கு பெயிண்டு டப்பா பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் இசக்கிமுத்து (25) என்பவர் லோடு ஆட்டோவை ஓட்டி வந்தார்.
நாங்குநேரி நம்பிநகர் தனியார் மில் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் வரும் போது லோடு ஆட்டோ டயர் வெடித்ததால் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது ஏறி கவிழ்ந்தது. இதில் பெயிண்டு டப்பாக்கள் உடைந்ததால் அதிலிருந்து பெயிண்டு சாலையில் கொட்டியது.
மேலும் டிரைவர் இசக்கிமுத்து மற்றும் அவருடன் வந்த சி.என். கிராமத்தைச் சேர்ந்த ஜெனிஸ் (24) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.