அச்சன்புதூர்:
கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி பகவதி அம்மன், உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு அபிசேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரவில் சட்டத்தேரில் எழுந்தருளி வீதி உலாவும், நேற்று முன்தினம் மாலை விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் எடுத்து முக்கிய வீதிவழியாகவும் வந்தனர். இரவில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிகர நிகழ்ச்சியான விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உச்சிமாகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து பகவதியம்மன் ஊர்விளையாடிவந்து அருளாசி வழங்கும் நிகழ்ச்சியும், பக்தர்கள் பொங்கலிட்டு மொட்டைபோட்டு நேர்ச்சை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை சொக்கம்பட்டி கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் சொக்கம்பட்டி காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.