ஓசூர் அருகே லாரி மீது கார் மோதல் பிளஸ்-2 மாணவி சாவு தாய்-தந்தை உள்பட 3 பேர் படுகாயம்
ஓசூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவி இறந்தார். அவருடைய தாய், தந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
திருப்பூரை சேர்ந்தவர் ரகு (வயது 56). இவர் பெங்களூருவில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் குடும்பத்தினருடன் பெங்களூருவை நோக்கி காரில் சென்றார். காரை ரகு ஓட்டிச்சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த கார் சென்று கொண்டு இருந்தது.
அப்போது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில், காரின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் காரில் முன் பகுதியில் அமர்ந்திருந்த ரகுவின் மகளான பிளஸ்-2 மாணவி சுபிட்ஷா (17) உடல் நசுங்கி இறந்தார். மேலும் ரகு மற்றும் அவரது மனைவி வாணிஸ்ரீ (48), மகன் கவுதம் (24) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.