சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடுவதற்கான வழிமுறைகள்- கலெக்டர் தகவல்
சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடுவதற்கான வழிமுறைகள் குறித்து கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.;
தூத்துக்குடி, ஏப்.1-
சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடுவதற்கான வழிமுறைகள் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதிமுறைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கேபிள் டி.வி., தொலைக்காட்சி சேனல்கள் மற்றம் சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்வது தொடர்பாக சான்றிதழ் பெறும் பொருட்டு மாவட்ட அளவில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிக்கும் குழு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. தொலைக்காட்சி சேனல்கள், கேபிள் டிவி சேனல்கள், ரேடியோ, தனியார் எப்.எம் சேனல்கள், திரையரங்குகள், இ-பேப்பர்கள், பொது இடங்களில் திரையிடப்படும் ஒளி, ஒலி காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவை அனைத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடவோ, ஒளிபரப்பவோ விரும்பும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மேற்கண்ட குழுவின் மூலம் முன்கூட்டியே சான்றளிக்கப்பட்ட பின்னரே அவற்றை வெளியிட வேண்டும்.
வருகிற 5, 6-ந் தேதிகளில் மட்டும் எந்த ஒரு பத்திரிகைகளிலும் தேர்தல் விளம்பரம் செய்ய இந்த குழுவினரின் முன்அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலமாக செய்யும் விளம்பரங்கள் அனைத்தும், மேற்படி குழுவினரால் அனுமதி பெறப்பட்டுள்ளதா என கண்காணிக்கப்படும்.
இந்த அனுமதி பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்ய உத்தேசித்து உள்ள தினத்தில் இருந்து 3 நாட்களுக்கு முன்பாகவும், பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி வேட்பாளர்கள், இதர வேட்பாளர்கள் 7 நாட்களுக்கு முன்பாகவும் விண்ணப்ப மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பேரில் 2 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
நடவடிக்கை
விளம்பரங்கள் அனுமதி பெறுவதற்கு விளம்பரம் செய்யப்பட உள்ள விளம்பர படத்தின் மின்னணு வடிவிலான தமிழாக்கம் செய்யப்பட்ட இரண்டு நகல்கள், விளம்பரம் தயார் செய்வதற்கு ஏற்பட்ட தொகை விவரம், தொலைக்காட்சி சேனல் மற்றும் கேபிள் ஒளிபரப்பு ஆகியவற்றில் விளம்பரம் செய்வதற்கான நேரம் மற்றும் கட்டணம், இந்த விளம்பரத்தின் மூலம் வேட்பாளர் மற்றும் அவரது கட்சிக்கு கிடைக்கப் பெறும் வாய்ப்புகள் குறித்த வாக்குமூலம், தொலைக்காட்சி, கேபிள் டி.வி மூலமாக வேட்பாளர்களின் அனுமதி பெறாமல் செய்யப்படும் விளம்பரங்கள் இந்த குழுவினருக்கு தெரியவரும்பட்சத்தில், மேற்படி ஒளிபரப்பு நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் தொடர்பாக வினியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில், அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அச்சடிக்கப்படாதது குறித்து இந்த குழுவினரின் கவனத்துக்கு வருமாயின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 127-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக ஊடகங்கள் மூலமாக வரப்பெறும் புகார்களையும் இந்த குழுவானது விசாரணை மேற்கொண்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரம் உள்ளது.
இந்த குழுவின் உத்தரவு திருப்திகரமாக இல்லையெனில் மாநில அளவில் உள்ள ஊடகச்சான்று மற்றும் கண்காணிக்கும் குழு விடம் மேல் முறையீடு செய்து கொள்ள வழிவகை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.