ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து 4 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும்படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ராமநாதபுரம் காவல்துணை கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சமும், பரமக்குடியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 970 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கமுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கீழக்கரையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாடானையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8 லட்சத்து 49 ஆயிரத்து 580 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ராமேசுவரம் காவல்துணை கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பள்ளி மாணவர்களின் ஷூக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.