பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 பேருக்கு 2 ஆண்டு ஜெயில்

கோவில்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 பேருக்கு அபராதத்துடன் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2021-03-31 18:31 GMT
கோவில்பட்டி, ஏப்:
கழுகுமலையை அடுத்த கல்லூரணி மேலத் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 44). இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி தனது ஸ்கூட்டரில் கோவில்பட்டியை அடுத்த சாலைபுதூர் விநாயகா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாராம். நெல்லை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூர் அருகே உள்ள கல்லூரி முன்பு சென்றபோது, அவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து, விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தூத்துக்குடி அல்பர்ட் அண்ட் கோ சந்திப்பைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் விஜய் (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் செல்வம் (32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரித்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்