வெவ்வேறு சாலை விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் பலி
தோகைமலை, உப்பிடமங்கல் பகுதிகளில் வெவ்வேறு சாலை விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;
தோகைமலை
கொத்தனார் பலி
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது38). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் காவல்காரன்பட்டிக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செனறு கொண்டிருந்தார். அப்போது, காவல்காரன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துசாமி மோட்டார் சைக்கிள், ஜேசுராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜேசுராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசுராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அருசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஜேசுராஜ் மனைவி சவரியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், முத்துசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
தரகம்பட்டி அருகே உள்ள தவளைவீரன்பட்டியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70). இவர் உப்பிடமங்கலம் அருகே உள்ள புதுகஞ்சமனூரில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக தனது பேத்தி வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே உப்பிடமங்கலம் ஜெகதாபி சாலையில் ஏழுமலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஏழுமலை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.