மேலும் 5 ஆசிரியைகளுக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 5 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-03-31 18:12 GMT
தேனி: 

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியைகள் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். 

இதனால், அந்த பள்ளியில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில், மேலும் 5 ஆசிரியைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. 

இதையடுத்து அவர்களில் 3 பேர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

2 பேர் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனால், அந்த பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வந்து சென்ற பிளஸ்-2 மாணவ, மாணவிகள் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்த 5 ஆசிரியைகள் உள்பட நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 299 ஆக அதிகரித்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 8 பேர் குணமாகி வீடு திரும்பினர். 

இதுவரை 17 ஆயிரத்து 39 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டனர். ஒரே பள்ளியில் 7 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தபால் வாக்குப்பதிவும் இங்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்