திருச்செந்தூர் கோவிலில் பஞ்சாமிர்தம் விற்பனை தொடங்கியது
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாமிர்தம் விற்பனை தொடங்கியது.
திருச்செந்தூர், ஏப்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நெய்வேத்திய பிரசாதங்கள் குத்தகைதாரர் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அறநிலையத் துறை ஆணையர் உத்தரவுப்படி கோவில் நிர்வாகம் மூலம் நேரடியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லட்டு, அதிரசம், முறுக்கு ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பஞ்சாமிர்தம் மட்டும் நேரடி விற்பனை செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. முதன் முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் பிரசாத ஸ்டாலில் அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ.50-க்கு கோவில் நிர்வாகம் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்பட்டது.