நயன்தாரா பற்றி பேசியபோது வந்த கோபம், ஒரு தாயை பற்றி பேசும்போது வராதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

நயன்தாரா பற்றி பேசும் போது வந்த கோபம், ஒரு தாயைபற்றி பேசும் போது வராதது ஏன் என்று மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2021-03-31 17:50 GMT
விழுப்புரம்

அன்புமணி ராமதாஸ் பிரசாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதன்படி சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் ராஜாவை ஆதரித்து சின்னசேலம் பஸ் நிலையம், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாம்பழம் சின்னத்துக்கு வாக்குசேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசியல் வியாபாரி

 இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். நம்மில் ஒரு விவசாயி இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சர், அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வர வேண்டும். இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம்  அமைய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது டாக்டர் ராமதாஸ் ஆவார். 

இதற்காக அவர் பலக்கட்ட போராட்டங்களை அறிவித்து நடத்தி உள்ளார். இந்த மாவட்டம் நிச்சயம் வளம் பெறும். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். 
இந்த தேர்தலை பொறுத்த வரைக்கும் நம்முடைய முதல்-அமைச்சர் யார் என்றால் எடப்பாடி பழனிசாமி, அவர் ஒரு விவசாயி. ஆனால் தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்றால் அவர் ஒரு அரசியல் வியாபாரி.

எடப்பாடி பழனிசாமிஇயல்பான விவசாயி

தமிழக முதல்-அமைச்சராக வருவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது. உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு தகுதி கலைஞரின் மகன். இந்த ஒரு தகுதியைத் தவிர தமிழ்நாட்டை பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? 

விவசாயம், சமூக நீதி, சமத்துவம், சரித்திரம், கணக்கு, மக்களின் கஷ்டம் என்று ஏதாவது உங்களுக்கு தெரியுமா?.
ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தகுதியுள்ளது. அவர் ஒரு விவசாயி. மு.க.ஸ்டாலினை போன்று நடிக்கவில்லை. அந்த நடிப்பெல்லாம் எங்களுக்கு தெரியாது. எடப்பாடி பழனிசாமி ஒரு இயல்பான விவசாயி. 

ஆ.ராசாவை ஏன் நீக்கவில்லை

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயை பற்றி ஆ.ராசா எம்.பி. பேசியது கண்டனத்துக்கு உரியதாகும். இதுகுறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நயன்தாரா குறித்து  ராதாரவி அவதூறாக பேசினார். உடனடியாக அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசாவை ஏன் நீக்கவில்லை. 

நயன்தாரா பற்றி பேசிய போது வந்த கோபம், ஒரு தாயை பற்றி பேசும் போது மட்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் வரவில்லை. இது என்ன நியாயம். பெண்களை, தாய்மையை உங்களுக்கு மதிக்க தெரியவில்லை. நீங்கள் எப்படி முதல்-அமைச்சராக முடியும்.

இதுவே அ.தி.மு.க. கூட்டணியில் யாராவது பேசியிருந்தால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். பெண்கள் குறித்து தி.மு.க.வினர் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதால், தமிழக பெண்கள் தி.மு.க.வை  புறக்கணிக்க தயாராகி விட்டார்கள். இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

15 ஆண்டுகளாக சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள உதயசூரியன் இந்த தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.  இந்த தொகுதிக்கு ஏதாவது அவர் செய்திருக்கிறாரா?.  இந்த தொகுதிக்கு அவரால் ஏதாவது ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?, அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் அவரை ஆதரிக்க வேண்டும்?. அவருக்கு தி.மு.க. கட்சியினரே ஆதரவளிக்கவில்லை. தி.மு.க.வில் இருப்பவர்கள் நமக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். 

 ஒருமுறை நம்முடைய வெற்றி வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுமாறு உங்களை பணிவோடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரிஷிவந்தியம்
தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே.டி.சி.ஏ.சந்தோசை ஆதரித்து பகண்டை கூட்டுரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பா.ம.க. இளைஞர் அணி  தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசுகையில், அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி என்பது சமூகநீதி அடிப்படையில் அமைக்கப்பட்ட கூட்டணியாகும். விவசாயத்துக்கு முக்கியத்துவம் தருகின்ற கட்சி பா.ம.க. எனவே விவசாயி முதல்-அமைச்சர் ஆவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தருகிறது என்றாா். 

மேலும் செய்திகள்