தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தேனி:
உத்தமபாளையம் அருகே கோம்பையை சேர்ந்தவர் விஜயபாபு என்ற செல்வம் (வயது 37). கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது உறவினர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
சிகிச்சை அளிக்க தாமதம் செய்வதாக கூறி அவர் தகராறு செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் கண்ணாடியை தனது கையால் தாக்கி உடைத்தார். இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் சுருளிவேல் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி விஜயா, இந்த வழக்கில் செல்வத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.