சின்னம் பொருத்திய மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு
வாக்குகள் சரியாக பதிவாகிறதா என்று வேட்பாளர்களின் சின்னம் பொருத்திய மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1,042 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1,042 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,147 வாக்கு பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 231 எந்திரங்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஊட்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று 2-வது நாளாக வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
31 மண்டல குழுவினர் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாடு எந்திரம், வாக்கினை உறுதிசெய்யும் எந்திரங்களுக்கு இணைப்பு கொடுத்து வாக்கு சீட்டை பொருத்தினர். அதன் பின்னர் 9 வேட்பாளர்களுக்கு நேராக மாதிரி வாக்குப்பதிவு செய்து, வேட்பாளரின் சின்னம், பெயர் சரியாக பதிவாகி உள்ளதா என்று சரிபார்த்தனர்.
பின்னர் சின்னம் பொருத்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 19,000 மாதிரி வாக்குகள் செலுத்தி சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு, வாக்கினை உறுதி செய்யும் எந்திரத்தில் பதிவான ரசீதுகள் வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து மண்டலம் வாரியாக எந்திரங்கள் ஒதுக்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த தகவலை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.