சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த தி.மு.க. முயற்சி
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து பேசி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த தி.மு.க.வினர் முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், அ.தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம், அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அக்கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வினர் தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் தனிப்பட்ட நபர்களை தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பார்வையாளர் தனிநபர் குறித்து பேச கூடாது என்றார். ஆனால் தொடர்ந்து தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். இதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த தி.மு.க.வினர் முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். இதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட கூடும். எனவே என்னை பற்றியும், என் மகன் மற்றும் கட்சிக்காரர்கள் குறித்தும் பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்து உள்ளோம்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். பொள்ளாச்சியில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பொள்ளாச்சி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். தி.மு.க.விற்கு பொதுமக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.