ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-03-31 16:49 GMT
பொள்ளாச்சி,

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.  இந்த நிலையில் வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் குமரன்கட்டம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.  இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதை கொண்டு வந்தவர் ரெட்டியாரூரை சேர்ந்த சபரி என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நிலையான கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமியிடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வால்பாறை தொகுதியில் ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்