வாக்காளர்களுக்கு வழங்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? தீவிர வாகன சோதனை
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்று வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.;
வால்பாறை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற விதிமீறல்களை தடுக்க பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசாருடன் துணை ராணுவத்தினரும் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் வால்பாறை-பொள்ளாச்சி சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் முகாமிட்டு அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி அதிக பணம் கொண்டு செல்லப்படுகிறதா?, அவ்வாறு கொண்டு செல்லப்பட்டால் அதற்கு உரிய ஆவணம் உள்ளதா? போன்றவற்றை கண்காணிக்கின்றனர்.
இது தவிர வால்பாறையில் வாக்காளர்களுக்கு வழங்க இருசக்கர வாகனங்களிலும் பணம் கொண்டு வரப்படலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
தமிழக-கேரள எல்லையில் மளுக்கப்பாறை வழியாக தமிழக்த்துக்குள் வரும் வாகனங்களும், கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் வாகனங்களின் எண், டிரைவர் குறித்த விவரம் போன்றவை சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது.