சிறுமுகை அருகே, ரூ.5 லட்சம் 1200 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
சிறுமுகை அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ள இடுகம்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக சிறுமுகை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனிசாமி, தலைமைக் காவலர் நித்யானந்தர் தனிப்பிரிவு காவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்த ஜெயக்குமாரின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள வீட்டு தோட்டத்தில் பின்புறம் உள்ள ஷெட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள1200 கிலோ குட்கா புகையிலை மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் இடுகம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 48) அவருடன் இருந்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி சஜ்ஜூ (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பதுக்கி வைத்திருந்த குட்கா புகையிலை கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.