கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடோடி வரும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் - அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. பேச்சு

திருப்பூர் வடக்கு தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடோடி வரும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-31 14:12 GMT
திருப்பூர், 

திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. நேற்று தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடைய சொந்த ஊர் என்பதால் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அ.தி.மு.க. அங்கேரிபாளையம் பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 400 இருசக்கர வாகனங்களில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் படைசூழ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பிரசாரத்தின் போது வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. பேசியதாவது- கடந்த 5 ஆண்டுகளில் குடிநீர், தார்சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பொதுமக்களின் ஏராளமான கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடோடி வரும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்