பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்படும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேச்சு
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்படும் என்று இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசினார்.
கன்னிவாடி,
ஆத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான இ.பெரியசாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மற்றும் சங்கரலிங்கபுரம், கரியகவுண்டன்புதூர், வெள்ளமடத்துப்பட்டி, செட்டியபட்டி, ஆதிதிராவிடர்காலனி, ராஜாபுதூர், குழப்பநாயக்கனூர், குள்ளம்பட்டி, கருப்பிபடம், திருமலைநகர், கணபதிநகர், திருமலைராயபுரம், அரசமரத்துபட்டி, போலியமனூர் உள்ளிட்ட கிராமங்களில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அங்கு பொதுமக்கள் முன்னிலையில் பேசியதாவது:-
நான் அமைச்சராக இருந்தபோது ஸ்ரீராமபுரம் பேரூராட்சியை சேர்ந்த 1,360 பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நான் எடுத்த தீவிர முயற்சியால் மீண்டும் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. பேரூராட்சி பகுதி மக்கள் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்படும். அதோடு அதன் பணி நாட்கள் 150 நாளாகவும், கூலியாக ரூ.300 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
ஸ்ரீராமபுரம் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும். இங்குள்ள மக்களின் குடிநீருக்காக கோம்பையில் கிணறு வெட்டி அங்கிருந்து தண்ணீர் வழங்கினேன். அதேபோல் போலியமனூரில் தண்ணீர் தொட்டி இல்லை என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி நான் மீண்டும் எம்.எல்.ஏ.வாக வந்தால் அங்கு குடிநீர் தொட்டி கட்டப்படும்.
அதுபோல் மக்கள் விரோதமாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும். கொரோனா காலத்தில் தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே தி.மு.க. ஆட்சி அமைந்ததும் குடும்பத்துக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் உங்கள் வீட்டுப்பிள்ளை. உங்களின் குரலுக்கு எந்நேரமும் ஓடோடி வருவேன். ஆகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் பேரூர் செயலாளர் ராஜா, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சத்யமூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், தர்மத்துப்பட்டி வக்கீல் மூர்த்தி, ஆதாம் சேட், சக்திவேல், கோட்டைப்பட்டி கண்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், வண்ணவெங்கடசுப்பையா ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருளானந்தம், பரமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.