தேனி மாவட்டத்தில் ஏழைகளின் உயர்கல்வியை எளிமையாக்கியவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேச்சு
தேனி மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை எளிமையாக்கியவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று ப.ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார்.
தேனி,
தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், 3-வது முறையாக களம் காண்கிறார். போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதேநேரத்தில் தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பழனிசெட்டிபட்டியில் தேவாங்க செட்டியார் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், ப.ரவீந்திரநாத் எம்.பி. கலந்துகொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு திரட்டி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் நல்லாட்சி தொடர உங்களின் ஆதரவை அளிக்க வேண்டும். போடி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். போடி சட்டமன்ற தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ., அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளார்.
இதன் மூலம் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எளிமையாக்கி உள்ளார். இந்த சாதனை ஆட்சி தொடர, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து பழனிசெட்டிபட்டி, மாரியம்மன்கோவில்பட்டி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய ஊர்களில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் வசந்தா நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.