தேர்தலில் வாக்களிப்பதற்காக அழைத்து வர 5 குழுக்கள் அமைப்பு
அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவர்களை தேர்தலில் வாக்களிப்பதற்காக அழைத்து வர போலீசார், வனத்துறையினர் ஒருங்கிணைந்த 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவர்களை தேர்தலில் வாக்களிப்பதற்காக அழைத்து வர போலீசார், வனத்துறையினர் ஒருங்கிணைந்த 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
காட்டு யானைகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 280, கூடலூர் தொகுதியில் 280 என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளது.
நீலகிரி மலைப்பிரதேசமாக உள்ளதால் சில வாக்குச்சாவடிகள் அதிக தொலைவில் இருக்கிறது. அங்கு வனப்பகுதி வழியாகதான் செல்ல வேண்டும்.
அந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வர முடியாத நிலை ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு அடர்ந்த வனப்பகுதிகளில் இருக்கும் மக்கள் வாக்களிக்க பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
5 குழுக்கள் அமைப்பு
அதிக தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வாக்காளர்களை வாக்களிக்க அழைத்து வர மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீசார், வனத்துறையினர் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவர்களை போலீசார், வனத்துறையினர் இணைந்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.
போக்குவரத்து வசதி
இதற்காக அந்த குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் அதிக தொலைவில் இருப்பதால் அல்லிமாயார், கொலக்கம்பை, குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று 7 இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டுமா என்று கணக்கிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேர்தல் பார்வையாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதித்தவர்கள் தேர்தல் நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.