வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தும் பணி
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
ஊட்டி
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி யிடும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெற்றது.
ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கான சின்னம் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மோனிகா தலைமையில் நடந்தது.
அங்கு பாதுகாப்பு கிடங்கின் சீல் அகற்றப்பட்டு, எந்திரங்கள் வெளியே எடுக்கப் பட்டன.
தொடர்ந்து ஊட்டி தொகுதிக்கு என்று நியமிக்கப்பட்ட 31 மண்டல குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்துவதற்காக மேஜைகள் போடப்பட்டு இருந்தது.
பின்னர் குழு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் வழங்கப்பட்டது.
சின்னம் பொருத்தும் பணி
அவர்கள் வாக்காளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எந்திரத்தில் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
எந்திரங்களுக்கு பேட்டரி பொருத்தி இணைப்பு உள்ளதா என்று சரிபார்த்து, வாக்குப்பதிவு எந்திர எண் மற்றும் வாக்கு சீட்டு எண்ணை குறித்து கொண்டு சீல் வைத்தனர்.
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குப்பதிவு எந்திரங்கள், 308 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 308 வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் என மொத்தம் 924 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
83 மண்டல குழுக்கள்
ஊட்டி, குன்னூரில் நடந்த பணியை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 83 மண்டல அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
868 வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக் கள் பொருத்தியதோடு மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 4,168 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பணி முடிந்த பின்னர் மண்டலம் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங் கள் தயாராக வைக்கப்பட உள்ளது.