மணப்பாறைக்கு இன்று மாலை வருகை தரும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை வரவேற்க திரண்டு வாருங்கள் வக்கீல் கிருஷ்ணகோபால் அழைப்பு
மணப்பாறைக்கு இன்று மாலை வரும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை வரவேற்க அலைகடலென திரண்டு வாருங்கள் என்று தே.மு.தி.க. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான வக்கீல் பி.எல்.கிருஷ்ணகோபால் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க., அ.ம.மு.க. கூட்டணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தே.மு.தி.க. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பி.எல்.கிருஷ்ணகோபால் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் இன்று(புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மணப்பாறை பஸ் நிலையம் அருகே முரசு சின்னத்தில் வாக்களிக்க கேட்டு பிரசாரம் செய்வதற்காக வருகை தர உள்ளார். ஆகவே எழுச்சி மிகுந்த இந்த பிரசாரத்தில் தே.மு.தி.க., அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு மகத்தான வரவேற்பு அளிக்க அலைகடலென திரண்டு வர வேண்டும் என்று வக்கீல்
கிருஷ்ணகோபால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் பி.எல்.கிருஷ்ணகோபால் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முரசு சின்னத்தில் வாக்குசேகரித்து வரும் அவருக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சி மிகுந்த வரவேற்பை வழங்கி வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மக்கள் முரசு சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியுடன் மணப்பாறை பகுதியில் வளர்ச்சிப்பணி செய்ய வாய்ப்பளித்திட வேண்டும் என்று வக்கீல் கிருஷ்ணகோபால் தெரிவித்துள்ளார்.