சத்தியமங்கலத்தில் பரபரப்பு மாவட்ட வன அலுவலகத்தை குடும்பத்துடன் சென்று முற்றுகையிட்ட ஊழியர்கள்
மாவட்ட வன அலுவலகத்தை குடும்பத்துடன் சென்று ஊழியர்கள் முற்றுகையிட்டதால் சத்தியமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட வன அலுவலகத்தை குடும்பத்துடன் சென்று ஊழியர்கள் முற்றுகையிட்டதால் சத்தியமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வனச்சரகர்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில் வனச்சரகராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம்.
அதேபோல் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் வனச்சரகராக பணிபுரிந்து வருபவர் முத்து. இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் நிஹார்ரஞ்சன் உத்தரவின் பேரில் பணி மாறுதல் செய்யப்பட்டு கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக 2 வனச்சரகர்களும் தங்களை பணி மாறுதல் செய்த அதிகாரியை சந்தித்து மீண்டும் பணி உத்தரவு கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர் பணி உத்தரவு உடனே என்னால் போட்டு தர முடியாது என்றும் கூறியுள்ளார்.
அதனால் கடந்த ஒரு மாதமாக வனச்சரகர்கள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.
பழிவாங்கும் நோக்கம்
இந்தநிலையில் நேற்று காலை வனச்சரகர்கள் 2 பேரும் தங்களது குடும்பத்தாருடன் சத்தியமங்கலத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டார்கள்.
இவர்களுடன் வந்த தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம் கூறும்போது, 'பழிவாங்கும் நோக்குடன் இந்த இருவரையும் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி முதல் கட்டாய காத்திருப்பில் வைத்துள்ளார்கள். ஒரு மாத கால பணியும் வழங்கப்படவில்லை. ஊதியமும் வழங்கப்படவில்லை.
பவானிசாகர், தாளவாடி ஆகிய வனச்சரகங்களில் காலி இடங்கள் இருந்தும் அவர்களுக்கு அங்கு பணிமாறுதல் தரவில்லை.
இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்காவிட்டால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப்பாதுகாவலரை கண்டித்து தேர்தல் முடிந்ததும் போராட்டம் நடத்துவோம்' என்றார்.