டிரைவர் தற்கொலை அதிர்ச்சியில் அண்ணன் சாவு
தக்கலை அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த அதிர்ச்சியில் அண்ணணும் பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த அதிர்ச்சியில் அண்ணணும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார் டிரைவர்
தக்கலை அருகே பாரதிநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஸ்ரீகண்டன் (வயது 41), கார் டிரைவர். இவருக்கு சந்தியா(38) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஸ்ரீகண்டன் சொந்தமாக கார் வைத்து தக்கலை போலீஸ் நிலையம் அருகில் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தார். ஸ்ரீகண்டனின் அண்ணன் மணிகண்டன்(44). இவருக்கு மஞ்சு(39) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மணிகண்டனும் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். மணிகண்டன் தம்பி மீது மிகுந்த பாசமாக இருந்து வந்தார்.
இந்தநிலையில் ஸ்ரீகண்டன் புதிதாக ஒரு சொகுசு கார் வாங்கினார். இதற்காக அவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் ஸ்ரீகண்டன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் ஸ்ரீகண்டன், வீட்டில் தனது அறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். திடீரென அவரது அறையில் இருந்து சத்தம் வருவதை கேட்டு குடும்பத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, ஸ்ரீகண்டன் தூக்கில் தொங்கிய நிலையில் துடித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அண்ணணும் சாவு
இதற்கிடையே, ஸ்ரீகண்டன் பற்றிய தகவல் அறிந்து மணிகண்டனும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து காத்திருந்தார். அப்போது, ஸ்ரீகண்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். தம்பி இறந்த தகவலை கேட்ட மணிகண்டனுக்கு திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் உடனே, அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே, ஸ்ரீகண்டன் இறந்த துக்கத்தில் இருந்த குடும்பத்தினர் அவருடைய அண்ணணும் உயிரிழந்த செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சோகம்
இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடன் தொல்லையால் தம்பி தற்கொலை செய்த தகவலை கேட்டு அண்ணணும் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.