தேரோட்டத்தில் இரு சமூகத்தினர் தகராறு; போலீஸ் கார் கண்ணாடி உடைப்பு சாலை மறியலால் பரபரப்பு

தேரோட்டத்தில் இரு சமூகத்தினர் தகராறு; போலீஸ் கார் கண்ணாடி உடைப்பு சாலை மறியலால் பரபரப்பு

Update: 2021-03-30 19:09 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் இரு சமூகத்தினர் இடையே தகராறில் போலீஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
தேரோட்டம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கடந்த 15-ந்‌ தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 20-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. 29-ந் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும், திருத்தேர் நிலை பெயர்தலும் நடைபெற்றது. 
இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கிடையே மாலை தேர் பரமத்திவேலூர் திருவள்ளுவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்விரோதம் காரணமாக இரு சமூகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
 சாலை மறியல்
இதனால் தேர் செல்லாமல் ேகாவில் அருகே நின்றது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஒரு சமூகத்தினர் திருவள்ளுவர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற பரமத்திவேலூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அங்கு நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடியை  மறியலில் ஈடுபட்டவர்கள் உடைத்து சேதப்படுத்தினர். 
 பின்னர் போலீசாரின் தொடர் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதுஒருபுறம் இருக்க மற்றொரு சமூகத்தினர் ஆத்திரமடைந்து மதுரை- சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் 2 காவிரி பாலத்திலும் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. 
தொடர்ந்து மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமு, பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 
சேலம்-மதுரை நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் கார், லாரி, பஸ்கள் என சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து ஸ்தம்பித்து நின்றன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=======

மேலும் செய்திகள்